டெல்லியில் திடீர் நிலஅதிர்வு: பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்!
டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் திடீர் நிலஅதிர்வு உணரப்பட்டது.
நேபாளத்தில் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லியில் சில பகுதிகளில் உணரப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்று (திங்கள்கிழமை) மாலை 4.16 மணியளவில் நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அங்கு பெரும் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகள் குலுங்கின.
இதன் தொடர்ச்சியாக டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டார் அளவுமானியில் 5.6 என பதிவானது. இந்த நில அதிர்வு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
டெல்லியில் 5 முதல் 10 விநாடிகள் வரை நில அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் ஏற்பட்ட இந்த நிலஅதிர்வால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கட்டடங்கள் அதிர்ந்ததால், அதன் உள்ளே இருந்தவர்கள் உடனடியாக வெளியே ஓடி வந்தனர்.