#Earthquake | ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
ஜப்பானில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் அதிகமாக நிலநடுக்கம் ஏற்படுவதுண்டு. ஜப்பானில் உள்ள வீடுகளும் இதற்கு ஏற்றவாறு தான் கட்டப்பட்டுள்ளது. இதனால் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அங்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. இருப்பினும் சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்படும்போது அங்கு கடுமையான பாதிப்பு நிகழ்ந்துவிடும். கடந்த ஆண்டு துவக்கத்தில் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் இந்திய நேரப்படி இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இது 37 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மக்கள் வெளிவராத நிலையில், சுனாமி எச்சரிக்கை மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.