ஆப்கானிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு....பொதுமக்கள் அச்சம்!
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 4.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வால் சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளிவரவில்லை.
கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளிலும் நில அதிர்வுகள் ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு முறை இவ்வாறு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 4,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அடிக்கடி ஆப்கானிஸ்தானில் நில அதிர்வுகள் ஏற்படுவது மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.