"இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்" - கொடைக்கானல் மக்கள் கோரிக்கை!
கொடைக்கானலுக்கு செல்ல இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என கொடைக்கானல் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை பல அறிவுரைகளை வழங்கி வருகிறது. மேலும் வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிகமான நீர்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுமாரும் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படியுங்கள் : மும்பை அணிக்கு எதிரான போட்டி – லக்னோ அணி அசத்தல் வெற்றி!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் வெயில் சதமடித்து 100டிகிரியை கடந்துள்ளது. அதிகபட்சமான கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடை வெயிலின் காரணமாக சென்னையைச் சுற்றியுள்ள முக்கியமான நீர்த்தேக்கங்களில் கடந்தை ஆண்டைவிட இந்த ஆண்டு கொள்ளவு சிறிய அளவில் குறைந்துள்ளது.
வெயிலில் இருந்து விடுபட்டு விடுமுறை தினத்தை கழிக்க சுற்றுத்தலங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கினர். இந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என வன சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த இபாஸ் நடைமுறையை மே 7 ம்தேதி முதல் ஜூன் 30 ம் தேதி வரை அமல்படுத்த நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இ பாஸ் முறையை அமல்படுத்த தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இ -பாஸ் பெற்று வர வேண்டும் என்று தீர்ப்பு கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பி உள்ளவர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொடைக்கானல் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே தொழில் சுற்றுலாவை நம்பி இருப்பதுதான்.
தற்போது கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இ -பாஸ் பெற்று வர வேண்டும் என்று தீர்ப்பு அமலுக்கு வந்தால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்று
கொடைக்கானலில் உள்ள உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர்.இ- பாஸ் எவ்வாறு பெறுவது ஒரு நாளைக்கு கொடைக்கானலுக்கு எத்தனை வாகனம் அனுமதிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு குழப்பங்களை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தி உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
மேலும் கொரோனா காலத்தில் இருந்து தற்போது மீண்டு வரக்கூடிய நிலையில் மீண்டும் கொரோனா காலத்திற்கே கொண்டு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதாக உள்ளூர் வாசிகள் வருத்தம் தெரிவித்தனர். மேலும் உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்து இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும், போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று வழி சாலைகளும் புதிய சுற்றுலா தளங்களும் உள்ளிட்டவை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.