இறந்தும் உதவிய கரங்கள்; ஏழைகளின் மருத்துவக் கடனை அடைத்த பெண்!
அமெரிக்காவில், கேஸி மேக்கின்டயர் என்ற பெண்மணி இறந்தும் பல்லாயிரக்கணக்கானோரின் மருத்துவக் கடனை அடைக்க உதவியுள்ளார்.
அமெரிக்காவில், காப்பீடு இருந்தால் மட்டுமே மருத்துவம் செய்ய இயலும். காப்பீடு இல்லையென்றால் எவ்வளவு பெரிய நோயாயுனும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற இயலாது. அமெரிக்காவில் பெரும்பாலான அளவுக்கு ஏழை, நடுத்தர, குறிப்பாகக் கருப்பின மக்கள் -காப்பீடு வைத்திருப்பதில்லை. வைத்திருக்கக் கூடிய அளவில் அவர்களுடைய வருமானமும் இருப்பதில்லை.
காப்பீடு இல்லாவிட்டாலும் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற ஒரு வழிதான் உள்ளது. அவசர நிலையில் வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் சிகிச்சை அளித்துதான் தீர வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருக்கிறது. இம்முறையில் காப்பீடு இல்லாவிட்டாலும் சிகிச்சை அளித்துவிட்டு, அவர்களை மருத்துவக் கடனாளியாக்கி விடுவார்கள். தொடர்ந்து, மருத்துவமனை சார்பில் கடனைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
2022-ம் ஆண்டு அரசு தரவுகளிலிருந்து ஒரு தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, 10 அமெரிக்கர்களில் ஒருவர் குறைந்தபட்சம் 250 டாலர்கள் மருத்துவக் கடன் வைத்திருக்கிறார். இவ்வாறு கடன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2.30 கோடி இவர்களில் 1.10 கோடி பேர் 2 ஆயிரம் டாலர்களுக்கும் மேல் கடன்கள் வைத்திருக்கின்றனர்.
அமெரிக்காவில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்த கேஸி மேக்கின்டயர் என்ற பெண், தன் இறப்புக்குப் பின் வெளியிடச் செய்த ஒரு வேண்டுகோள் மூலம் இன்றுவரையும் திரண்டுகொண்டிருக்கும் நிதியிலிருந்து சாதாரண மக்களின் பல லட்சம் டாலர்கள் மதிப்புள்ள மருத்துவக் கடன்கள் தீர்க்கப்பட விருக்கின்றன.
நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் கேஸி மேக்கின்டயர் என்ற பெண்மணி. கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஒரு வாரத்துக்கு முன் நவ. 12-ல் உயிரிழந்தார். இவருடைய மறைவைத் தொடர்ந்து, தன்னுடைய வாழ்வைக் கொண்டாடும் வகையில் மற்றவர்களின் மருத்துவக் கடன்களை வாங்குமாறு தாம் ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவிக்கும் கேஸியின் செய்தியை அவருடைய கணவர் ஆண்ட்ரூ ரோஸ் கிரிகோரி பதிவேற்றியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இந்தச் செய்தியில், கேஸி மேக்கின்டயர் குறிப்பிடுவதாவது;
"இதை நீங்கள் படிக்கும்போது நான் இறந்துவிட்டிருப்பேன். உங்களில் ஒவ்வொருவரிடமும் முழு மனதாக நான் அன்பு செலுத்தினேன். நீங்கள் அனைவரும் எந்த அளவு ஆழமாக என்னை விரும்பினீர்கள் என எனக்கு தெரியும்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவுடன் பலன்கருதா தன்னார்வத் தொண்டு அமைப்பான RIP Medical Debt - ஆர்ஐபி மெடிகல் டெட் மூலம் நிதி திரட்டுவதற்கான இணைப்பும் தரப்பட்டிருந்தது. மேக்கின் டயரின் கணவர் கிரிகோரி, இந்தச் செய்தியை நவ. 14-ல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். மிக விரைவிலேயே அதன் நன்கொடை 20 ஆயிரம் டாலரை எட்டியது. சற்றும் எதிர்பாராத வகையில் இந்த நன்கொடை தொடர்ந்து பெருமளவில் குவியத் தொடங்கியது.
ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்த நன்கொடை நிதியின் அளவு 2.20 லட்சம் டாலர்களாக இந்திய மதிப்பில் ரூ.1.83 கோடி என உயர்ந்தது. இதன் மூலம் 2 கோடி டாலருக்கும் அதிகமான, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.180 கோடி கடனைத் தீர்க்க முடியும் என்று ஆர்ஐபி மெடிகல் டெட் அமைப்பின் துணைத் தலைவர் டேனியல் லெம்பர்ட் தெரிவித்துள்ளார்.
"என்னுடைய மனைவிக்குக் காப்பீடு இருந்தது. புற்றுநோய் மருத்துவமனையில் நல்ல சிகிச்சை பெறவும் முடிந்தது. இருப்பினும், அவளுடைய சிகிச்சையின் மூலம் புற்றுநோய் சிகிச்சைக்கான "பயங்கரமான கட்டணங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது" என கிரிகோரி குறிப்பிட்டுள்ளார். கடந்த மே மாதத்தில் கிட்டத்தட்ட மரணத்தைச் சந்தித்த வேளையில்தான் கேஸி மேக்கின் டயரின் நினைவாக கடன் தீர்க்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என இருவரும் திட்டமிடத் தொடங்கியுள்ளனர். வடக்கு கரோலினாவில் தேவாலயத்தைச் சேர்ந்தோர் சுமார் 30 லட்சம் டாலர் மருத்துவக் கடன்களைத் தீர்க்கும் விடியோவொன்றைப் பார்த்ததன் மூலம் இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவர் கூறினார்.
தற்போது கேஸி மேக்கின்டயரால் பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவக் கடனிலிருந்து விடுபட்டு நிம்மதியைப் பெறவிருக்கின்றனர்.