தவெக தலைவர் விஜய்யின் "அரசியல் பஞ்ச்கள்...!"
நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் அரசியல் பஞ்ச்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
ரசிகர்களுக்காக 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை நிறுவி, பொதுமக்களுக்கு உதவி செய்து வந்தார் விஜய். இதையடுத்து, மருத்துவ முகாம், ரத்த தான முகாம், இரவு பாடசாலை, பொது நுாலகம், மழை வெள்ள நிவாரணம் என பல பணிகளில் 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து, 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி அரசியலில் இறங்குவதாக அறிவித்து, தனது அரசியல் கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என்று பெயரிட்டார்.
இந்நிலையில், 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக நடிகரும், தவெக தலைவருமான விஜய் அறிவித்திருந்தார். திரைப்பட படப்பிடிப்பிற்கு மத்தியில் அவ்வபொது தன்னை அரசியல் ஈடுபடித்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கல்வி விருது வழங்கும் விழா இரண்டு கட்டமாக நடைபெற்றது. முதற்கட்ட விழா கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட விழா இன்று நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : “நீட் தேர்வு விலக்கு குறித்த தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை வரவேற்கிறேன்” – தவெக தலைவர் விஜய்!
இந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய விஜய் கூறியதாவது :
"நீட் தேர்வால் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் என்பது கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிரானது. மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து நடத்தப்படும் நீட் தேர்வை எப்படி எதிர்கொள்ள முடியும்? நீட் தேர்வு முறைகேட்டால் அதன் மீதான நம்பகத்தன்மையை மக்கள் இழந்து விட்டனர். 1975-க்கு முன் கல்வி மாநில பட்டியலில் தான் இருந்தது; பின்பு பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டதிலிருந்து தான் பிரச்னையே தொடங்கியது. இதற்கு கால தாமதம் செய்யாமல், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒன்றிய அரசு உடனடியாக தீர்வுகாண வேண்டும்"
இவ்வாறு அவர் பேசினார்.
தவெக தலைவர் விஜயின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பெறும் பேசுபொருளாக மாறிவிட்டது. இதற்கிடையே, மத்திய அரசை கண்டித்து விஜய் பேசிய கருத்துகள் பின்வருமாறு.
பண மதிப்பிழப்பு குறித்து விஜய் (2016ம் ஆண்டு நவம்பர் 20)
பண மதிப்பிழப்பு விவகாரத்தில் சில விஷயங்களை தவிர்த்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படுக்கிறது. நிறைய விஷயங்களை பார்த்தேன். மனசுக்கு மிக கஷ்டமாக இருந்தது. நாட்டில் 20 சதவிகிதம் பணக்காரர்கள் தான் இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் பண்ணும் தவறால் மீதி இருக்கிற 80 சதவிகிதம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எதற்காக இப்படி ஒரு சட்டம் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதை முன் கூட்டியே திட்டமிட்டு நடைமுறைபடுத்திருக்கலாம் என்பதுதான் என் தாழ்மையான கருத்து.
ஜல்லிக்கட்டு குறித்து விஜய் (2017ம் ஆண்டு ஜனவரி 17)
"உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்கியது மக்களின் கலாச்சாரத்தையும் உரிமையையும் பாதுகாக்கத்தான். பறிப்பதற்கு அல்ல. தமிழர்களுடைய அடையாளம் ஜல்லிக்கட்டு. எதையும் எதிர்பார்க்காமல் யாருடைய தூண்டுதலும் இல்லாமல் எந்தவிதமான கட்சி பேதமும் இன்றி தமிழ் என்ற ஒரு உணர்வோடு போராட்டத்தில் இறங்கியுள்ள அனைத்து இளைஞர்களுக்கும் தலை வணங்குகிறேன்"
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விஜய் (2024ம் ஆண்டு மார்ச் 12)
"சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்க்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்"