துரைசிங்கம் - ஆறுச்சாமி | ஹரி சினிமாட்டிக் யூனிவெர்ஸ் குறித்து வெளியான அப்டேட்!
ஆறுச்சாமி கதாபாத்திரமும், துரைசிங்கம் கதாபாத்திரமும் ஒரே ஃப்ரேமில் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதற்கு இயக்குநர் ஹரி பதில் அளித்திருக்கிறார்.
சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான டாப் ஸ்டார் பிரசாந்தின் "தமிழ்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான் ஹரி. அன்று தொடங்கி இன்று வரை அவருடைய இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறி உள்ளது.
"சாமி", "கோவில்", "அருள்", "ஐயா", "ஆறு" மற்றும் "தாமிரபரணி" என்று தொடர்ச்சியாக பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி, கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் வெளியிட்ட திரைப்படம் தான் "சிங்கம்". இதுவரை மூன்று பாகங்களாக வெளியாகி இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான அருண் விஜயின் "யானை" என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்த ஹரி, தற்பொழுது பிரபல நடிகர் விஷால் அவர்களை வைத்து "ரத்னம்" என்கின்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இந்நிலையில் இப்பட ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த இயக்குனர் ஹரியிடம் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஹரி, தன்னுடைய சிங்கம் படத்தில் வரும் கதாபாத்திரத்தையும், சாமி திரைப்படத்தில் வரும் ஆறுச்சாமி என்கின்ற கதாபாத்திரத்தையும் ஒரு காட்சியில் இணைக்க திட்டமிட்டதாக கூறியுள்ளார். அதாவது "துரைசிங்கம் தனது மனைவியோடு பைக்கில் வந்து கொண்டிருப்பது போலவும், எதிரே ஆறுச்சாமி தனது மனைவி திரிஷாவுடன் காரில் வந்து கொண்டிருப்பது போலவும், இருவரும் ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தி பேசிக்கொள்வது போலவும் காட்சிகளை தான் அமைக்க முயன்றதாக கூறியுள்ளார்.
ஆனால் இது ஒரு கமர்சியல் திரைப்படம் என்பதால் அதை பிறகு கைவிட்டு விட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் இப்பொழுது உள்ள இயக்குனர்கள் அந்த யுக்தியை மிக அருமையாக கையாளுகிறார்கள், குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகச்சிறந்த முறையில் தனது கதை களத்தை அமைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி அவரை வெகுவாக பாராட்டி இருக்கிறார் இயக்குனர் ஹரி.