மாயனூர் அருகே முறையான வடிகால் இல்லாததால் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!
மாயனூர் பகுதிகளில் முறையாக வடிகால் இல்லாததால் மழைநீர் தேங்கி 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் நெற்பயிர் நீரில் மூழ்கிய சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல மாயனூர், கீழ மாயனூர், ரங்கநாதபுரம், கட்டளை ஆகிய பகுதிகளில் சுமார் 4000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதியை அமராவதி ஆற்றின் கடைமடை பகுதியாக உள்ளது. தற்போது இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.
கனமழையால் கட்டளை, ரங்கநாதபுரம் பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயம் செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து தற்பொழுது நெற்பயிர் நீரில் மூழ்கியதால் விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளதாக வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் இந்த பாதிப்பிற்கு சரிவர வடிகால் வாய்க்கால்களை தூர்வாரப்படாமல் இருப்பதே காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மழை தொடர்ந்தால் இன்னும் அதிக அளவில் விவசாய நிலங்கள் பாதிப்படையும் என கூறி போர்க்கால அடிப்படையில் இப்பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போல், நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம் அடைந்ததற்கு உடனடியாக நிவாரணமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வழங்கவும், வடிகால் வாய்க்கால்கள் தூர்வரவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.