ஓமலூரில் அரசு அலுவலகங்களில் குளம்போல் தேங்கிய மழைநீர் - பொதுமக்கள் அவதி..!
ஓமலூர் தாசில்தார் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களின் வளாகங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. நேற்றிரவு தொடங்கிய மழை இன்று காலை வரை தொடர்ந்தது. இதனால், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மழைநீர் குளம்போல தேங்கியது. அலுவலகம் செல்லும் பாதைகள் அனைத்தும் மழைநீரில் மூழ்கின.
இதனால், மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்கள் மழை நீரிலேயே நடந்து சென்று அதிகாரிகளை சந்தித்தனர். இதேபோல், ஓமலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்திலும் அதிகளவில் மழைநீர் தேங்கியதால், அதிகாரிகளும் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதையும் படியுங்கள் : நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், அரசு அலுவலகங்களின் முன்பாக மழைநீர் தேங்குவதால், அந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது. ஓமலூரில் அரசு அலுவலக வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், இனிமேல் மழை நீர் தேங்காதவண்ணம் கால்வாய் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.