திருவண்ணாமலையில் தொடர் கனமழை - போளூர் மஞ்சள் ஆற்றில் வெள்ள பெருக்கு!
திருவண்ணாமலையில் பெய்த தொடர் கனமழையால் போளூர் மஞ்சள் ஆற்றில் காட்டாறு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று ஒருசில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு திருவண்ணாமலை, வேங்கிக்கால், அடி அண்ணாமலை, கிரிவலப் பாதை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னல், சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மேலும்,திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஜமுனாமரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பெய்தது.
இதையும் படியுங்கள் : “‘ரகு தாத்தா’ போன்ற படத்தை தமிழ்நாட்டில்தான் பேச முடியும்” – கீர்த்தி சுரேஷ்!
தொடர் கனமழையால் போளூர் மஞ்சள் ஆற்றில் காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போளூர் அருகே அத்திமூர் ஊருக்குள் புகுந்த வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குட்பட்டனர். இந்த காட்டாறு வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்புகள், தேள், பூரான் போன்றவை வீடுகளில் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.