விமான ஓடுபாதையில் ஏற்பாடு செய்யப்பட்ட வித்தியாசமான இஃப்தார் நிகழ்ச்சி - எங்கே நடந்தது.?
உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முஸ்லிம்களின் புனித மாதங்களின் ஒன்றான ரமலான் மாதம் பிறை பார்க்கப்பட்டு சில நோன்புகளை கடந்துள்ளது. இஸ்லாமிய காலண்டரின் 9-வது மாதமான ரமலான் பிறை பார்க்கப்பட்டு அதனை தொடர்ந்து ஒரு மாதம் உண்ணா நோன்பை இஸ்லாமியர்கள் கடைபிடிப்பர்.
அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன்பு சஹர் எனப்படும் அந்த நேரத்திற்கான உணவுகளை உட்கொண்டு நோன்பினை தொடங்குவார்கள். மாலை சூரியன் மறைந்ததும் இஃப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நேரத்தில் பேரீத்தம் பழத்தை முதல் உணவாக எடுத்துக் கொண்டு நோன்பினை முடித்துக் கொள்வார்கள். இந்த சுழற்சி முறையை முஸ்லிம்கள் ஏறத்தாழ ஒரு மாத காலம் கடைபிடிப்பர்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்.. யார்? – இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!
நோன்பு திறக்கும் நேரத்தில் இஃப்தார் எனும் நிகழ்ச்சிகள் பள்ளிவாசல்கள், வேலை செய்யும் இடங்கள் என பல இடங்களில் ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் நோன்பு நோற்பவர்களை ஒரே இடத்தில் அமரவைத்து அவர்களுக்கு தேவையான உணவு , பழங்கள், குளிர்பானங்கள் பரிமாறப்படும்.
இந்த நிலையில் உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. துபாயில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்று நோன்பு திறப்பில் ஈடுபட்டனர். நோன்பு திறப்பு நிகழ்வில் பேரீச்சம்பழம், பழச்சாறு, பிரியாணி உள்ளிட்ட உணவுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.
இது தொடர்பாக துபாய் விமான நிலையத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி மஜீத் அல் ஜோக்கர் கூறியதாவது :
"துபாய் சர்வதேச விமான நிலைய ஊழியர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். விமான நிலையத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ஊழியர்களின் பங்களிப்பு முக்கியமானது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடுமையான பணிகளுக்கிடையிலும் இது போன்ற நிகழ்வு மன இறுக்கத்தை போக்கும் வகையில் உள்ளதாக இருந்தது. மேலும், தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும்"
இவ்வாறு துபாய் விமான நிலையத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி மஜீத் அல் ஜோக்கர் தெரிவித்தார்.