#Tesla Cybertruck-ஐ இந்திய தேசிய கொடியால் அலங்கரித்த துபாயை சேர்ந்த இந்தியர் - வீடியோ வைரல்!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் 2024 சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக தனது சைபர்ட்ரக்கை மூவர்ணக் கொடியால் அலங்கரித்துள்ளார். அவரது வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவின் 78வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நேற்று முன்தினம் (ஆக. 15) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் அரசு அலுவலகம், பள்ளிக் கூடங்கள், வீடுகளில் தேசியக் கொடியை அவமதிக்காத வகையில் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதேபோல், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பல்வேறு சமூக ஊடக தளங்களில் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வெளிப்படுத்தினர்.
அந்தவகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்தியர் ஒருவர், சுதந்திர தின நாளை தனித்துவமான முறையில் நினைவு கூர்ந்தார். அவர் தனது டெஸ்லா சைபர்ட்ரக்கை மூவர்ணப் படத்துடன் அலங்கரித்தது, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட கார் ரேப்பிங்கில் நிறுவனமான டயாப்லோ ஆட்டோ ஆக்சஸரீஸ் எல்எல்சி, இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளது.
அந்த பதிவில், “சைபர்ட்ரக் இக்பால் ஹட்பூருக்காக வடிவமைக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியாவின் 78 வது சுதந்திர தினத்தை கொண்டாடும், தனது நாட்டின் மீது உண்மையான தேசபக்தி கொண்ட ஒரு சிறந்த மனிதர்” என குறிப்பிடப்பட்டிருந்தது. கேரளாவின் காசர்கோட்டைச் சேர்ந்த இக்பால் ஹட்பூர் தொழில்முனைவோராக அறியப்படுகிறார்.
இந்த வீடியோ இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளையும் சுமார் 28,000 விருப்பங்களையும் பெற்றுள்ளது. ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் அந்த பதிவில், "இதயத்திலிருந்து மரியாதை" என்று பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர், “நாம் அனைவரும் இந்தியர்கள்” என பதிவிட்டிருந்தார். அதேபோல் மூன்றாவது நபர், "இது அருமை சகோதரரே" என்று பதிவிட்டிருந்தார்.
அதிகாரப்பூர்வ டெஸ்லா இணையதளத்தில், இந்த வாகனம் 11,000 பவுண்டுகள் இழுக்கும் திறன் கொண்டது எனவும், சுமார் 4989 கிலோ எடை கொண்டது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் எந்தவொரு நிலப்பரப்பையும் கையாளும் அளவுக்கு இந்த கார் கடினமானது மற்றும் வலுவானது என்று நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. இது ஒரு வலுவான துருப்பிடிக்காத-எஃகு வெளிப்புற சட்டகம் மற்றும் உடைந்து போகாத நீடித்த கவச கண்ணாடி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.