For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம்! காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன?

10:45 AM Nov 23, 2023 IST | Web Editor
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம்  காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன
Advertisement

போதைப்பொருட்களுக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? புள்ளி விவரங்கள் என்ன சொல்கிறது? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்....

Advertisement

போதை இல்லா தமிழ்நாடு உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை, கைது, சொத்துக்கள் முடக்கம், குண்டாஸ் போன்ற நடவடிக்கைகள் மூலம் போதைப்பொருட்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக கஞ்சா மற்றும் போதை பொருட்களை வேரோடு ஒழிக்க மொத்த விற்பனை செய்யக்கூடிய நபர்களை பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி போதை பொருட்கள் விற்பனை மூலமாக சேர்த்த சொத்துக்களை கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து தமிழக காவல்துறை முடக்கி வருகின்றனர். சென்னையில் குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை முற்றிலுமாக தடுக்க போதை பொருட்கள் சில்லறை விற்பனையாளர் முதல் மொத்த விற்பனையாளர் வரையிலான அனைவரது வீடுகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வேரோடு அழித்து வருகின்றனர்.

மேலும் குட்கா மற்றும் கஞ்சா போதை பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்ததாக காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் இதுவரை எடுத்த நடவடிக்கை குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்தாண்டு 2023 அக்டோபர் மாதம் வரை மட்டும் போதை பொருட்களுக்கு எதிராக 8427 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 19,733,400 கிலோ கஞ்சா, 800 கிராம் ஹெராயின், 30,875 எண்ணிக்கை போதை மாத்திரைகள் மற்றும் சுமார் 1224 கிலோ இதர போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் தொடர்ச்சியாக போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 384 குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. புகையிலை பொருட்களை தடுக்க தமிழக காவல்துறை சிறப்பு தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 10 மாதத்தில் மட்டும் 3947 பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகே உட்பட 33714 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு, சுமார் 178 டன் குட்கா, பான் மசாலா மற்றும் இதர புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடை செய்ய மாநில சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறை சோதனைகள் மற்றும் கைப்பற்றுதல், வழக்கு பதிவு செய்தல் முதலியவற்றை மேற்கொண்டு வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement