”மாணவர்கள் மத்தியில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி இன்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டு நிறைவடைந்துவிட்டது. தேர்தலின் போது திமுக 525 அறிவிப்புகள் கொடுத்தது. அதில் 10% கூட நிறைவேற்றவில்லை.. ஆனால் 98% பணிகள் நிறைவேறியதாக பொய்யான தகவல் தருகிறார். 100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் தர முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. அரிசி விலை உயர்வால் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் ஒரு கிலோ அரிசி 50 ரூபாய்க்கு விற்ற நிலையில் திமுக ஆட்சியில் 78 ரூபாயாக உள்ளது. அதிமுக ஆட்சியின் போது 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மற்ற மாநிலங்களில் இருந்து உணவு பொருட்கள் வாங்கி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
பள்ளி கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள் மத்தியில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இதற்கு ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். அனைத்து தறைகளிலும் ஊழல் அதிகரித்து வருகிறது. டாஸ்மாக்கில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது
பாஜக வுடன் நாங்கள் கூட்டணி வைத்தவுடன் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. ஸ்டாலின் ஏன் பதறுகிறார். திமுக கூட்டணியில் பல கட்சிகள் இருந்தாலும் மக்கள் தான் வாக்களிக்க வேண்டும். 100 ஆண்டுகள் கண்ட கட்சி காங்கிரஸ். ஆனால் திமுக விற்கு ஜால்ரா போடுபவர்கள் தான் அந்த கட்சிக்கு தலைவராக வர முடியும்.
விவசாயிகளுக்கு கூட்டுறவு பயிர் கடன் வழங்க ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்ற திட்டத்தை திமுக தொடங்கியது. ஆனால் கூட்டுறவு மையங்களில் இணையதள வசதி செய்யப்படாமல் குளறுபடி செய்யப்பட்டுள்ளது” என்று பேசினார்.