மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீதான போதைப்பொருள் வழக்கு தள்ளுபடி!
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் விஜய்யுடன் ‘பீஸ்ட்’, கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என பல படத்தில் நடித்து, தன் தனித்துவ நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடவன்தாரா பகுதியில் இருக்கும் கிங் குழும தலைவரும், தொழில் அதிபருமான முகமது நிஜாமின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது சாக்கோ போதைப்பொருள் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அன்று இரவு அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது போலீசார் 10 கிராம் கொக்கைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். வீட்டில் இருந்த சாக்கோ, உதவி இயக்குநர் பிளெஸி, 3 இளம் மாடல் அழகிகளை கைது செய்தனர்.
காலின்ஸ், பிரித்விராஜ், ஜஸ்பீர் சிங் ஆகிய மூவரும் ரேஷ்மாவுக்கும் , ப்ளெஸ்ஸிக்கும் போதைப்பொருள்களை விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து, போதைப்பொருள் பயன்பாடு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் 2 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டனர். அதன்பின், 2015, மார்ச் மாதம் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கின் விசாரணை சுமார் பத்தாண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில், மேற்கண்ட 7 பேர் மீதான குற்றச்சாட்டு போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாததால், அவர்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் இன்று(பிப். 11) உத்தரவிட்டுள்ளது.