போதைப் பொருள் வழக்கு | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்!
சமீபத்தில் பார் தகராறில் கைதான பிரதீபன் என்பவர் போலீசாரிடம், ஸ்ரீகாந்த் நாற்பது முறை போதைப்பொருள் பயன்படுத்தியதாக வாக்குமூலம் கொடுத்தார். அதன்படி நடிகர் ஸ்ரீகாந்த்தை சென்னை கீழ்ப்பாக்கத்தில் வைத்து போலீசார் பல மணி நேரம் பரிசோதனை மேற்கொண்டனர். அதன் முடிவில் நடிகர் ஸ்ரீகாந்த் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் வாங்கியது செல்போன் மூலம் அம்பலமானது. மேலும், ஸ்ரீகாந்த் ‘கொகைன்’ என்ற போதைப்பொருளை பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் கடந்த ஜூன் 24ம் தேதி ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.
இதனிடையே, போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. நடிகர் கிருஷ்ணாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் திட்டமிட்டனர். இதற்காக கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், கிருஷ்ணா செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானதாக கூறப்பட்டது. போலீசார் 2 நாட்களாக தேடி வந்த சூழலில், தனிப்படை போலீசார் கேரளாவில் வைத்து கடந்த ஜூன் 26ம் தேதி ஸ்ரீகிருஷ்ணாவை பிடித்தனர்.
இதனையடுத்து நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் ஜாமின் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களை, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர், இருவா் தரப்பிலும் ஜாமின் வழங்கக்கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி நிா்மல்குமார் முன்பு இன்று (ஜூலை 8) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டது. ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புலன் விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராஜ வேண்டும் என்ற நிபந்தனையும் அளிக்கப்பட்டுள்ளது.