விரைவில் ஓட்டுநர் இல்லா ரயில்கள்! | அதிரடி காட்டும் சென்னை மெட்ரோ...
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2ல், ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களை உருவாக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையை பொறுத்தவரை மெட்ரோ ரயில் சேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. அதிகரித்து வரும் போக்குவரத்து பிரச்னைக்கு, மெட்ரோவின் வருகையும், சேவையும் மிகப்பெரிய நிம்மதியை பயணிகளுக்கு தந்து வருகிறது.
இப்போதைக்கு சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் ஓடுகிறது.. சென்ட்ரலிலிருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடம் உள்ளது. சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக இன்னொரு வழித்தடம் செயல்பட்டு வருகிறது.
பயணிகளின் வசதிக்காகவே, பல்வேறு அதிரடிகளை மெட்ரோ நிறுவனம் அவ்வப்போது அறிவித்து வருகிறது. அந்த வகையில், 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2ல், ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களை உருவாக்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ269 கோடியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 26 மெட்ரோ ரயில்கள் வழங்க ஒப்பந்தத்தில் கையெழுத்தான நிலையில், தற்போது கூடுதலாக 10 மெட்ரோ ரயில்கள் என மொத்தம் 36 மெட்ரோ ரயில்களை வழங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.