ரஷ்ய போரில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் பலி - 6 மாதங்கள் கழித்து கொண்டுவரப்பட்ட உடல்!
ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்த கன்ஹாயா யாதவின் உடல் 6 மாதங்கள் கழித்து சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பன்கட்டா கிராமத்தைச் சேர்ந்த கன்ஹையா யாதவ் (41) கடந்த ஜனவரி மாதம் ரஷ்யாவில் சமையல்காரராக வேலை செய்வதற்கு சென்றார். சமையல் வேலைக்காக செயிண்ட் பீட்டர்ஸ்பர் நகருக்கு சென்ற அவர் ரஷ்ய ராணுவத்திற்காக உக்ரைனுடனான போரில் சண்டையிட அனுப்பப்பட்டார்.
கடந்த மே மாதம் 9-ம் தேதியன்று போரில் அவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர் தனது குடும்பத்தினருக்கு தெரிவித்தார். தொடர்ந்து அவர் அம்மாதம் 25-ம் தேதி வரை அவரது குடும்பத்தினருடன் தொடர்பிலிருந்ததாகவும் அதற்கு பின்னர் அவரைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை எனவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த டிச.6 அன்று ரஷ்யாவிலுள்ள இந்தியத் தூதரகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாதவ் கடந்த ஜுன் மாதம் 17-ம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து, கடந்த (டிச.23) ரஷ்யாவிலிருந்து அவரது உடல் விமானம் மூலம் வாரணாசி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதையடுத்து அங்கிருந்து அவரது சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
ராணுவத்திற்காக, உயிரிழந்த கன்ஹையா யாதவிற்கு ஒரு மனைவியும் இரு மகன்களும் உள்ளார்கள். முன்னதாகவே, உயிரிழந்த கன்ஹையா யாதவின் குடும்பத்திற்கு ரஷ்ய அரசு சார்பில் ரூ.30 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.