சென்னையில் குடிநீர், மின்சாரம், போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!
நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும் அதுதொடர்பான அரசாணை நாளை வெளியிடப்படும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ள நிவாரணப் பணிகளை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெள்ளப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு நாளை வருகிறது. செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் அவர்கள் ஆய்வு செய்கின்றனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் ஆலோசகர் குணால் சத்யார்தி தலைமையில் ஒரு குழு வருகிறது. அந்த குழுவில் 5 பேர் இடம்பெற்றுள்ளனர். வேளாண்மை, நெடுஞ்சாலை, நிதி, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 5 பேர் வருகின்றனர். நாளை மாலை வந்துவிட்டு, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளனர்.
இப்போது இருக்கும் ஒரே சவால், குப்பைகள். டிச.3ம் தேதி முதல் டிச.5ம் தேதி வரை, புயலின் காரணமாக கனமழை இருந்தது. இதனால், டிச.6ம் தேதியில் இருந்துதான், குப்பைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. அந்த 3 நாட்களில் வந்த குப்பைகள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், சேதமடைந்த குப்பைகளும் சேர்ந்துவிட்டது. தனித்தனி குழுக்கள் அமைத்து குப்பைகளை அகற்றும்பணி நடந்து வருகிறது. அதேபோல், தெருக்களில் மழையால் ஏற்பட்ட சேறு சகதிகளை அகற்றுவதும், அந்தப் பகுதிகளில் பிளிச்சிங் பவுடர் தூவும் பணிகளும்தான், தற்போது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். அதுதொடர்பான அரசாணை நாளை வெளியிடப்படும். அதில் மற்ற விவரங்கள் அனைத்தும் வெளியிடப்படும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.