மெக்சிகோவில் மழை, வெள்ளத்தில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு!
வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாடு அருகே பசுபிக் கடலில் புயல் உருவாகியது. இந்த புயலுக்கு ‘ரேமண்ட்’ என பெயரிடப்பட்டது. இந்த புயல் காரணமாக மெக்சிகோவில் கனமழை கொட்டி தீர்த்தது. அந்நாட்டின் 32 மாகாணங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர் கனமழை காரணமாக, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது.
அதிலும் குறிப்பாக, அந்நாட்டின் குவாரடிரோ, ஹிடல்கோ, வெரகுரூஸ், சன் லுயிஸ் பொடொசி ஆகிய நகரங்கள் அதிக அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளன. காசோன்ஸ் ஆற்றின் கரையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் கார்கள் அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மேலும், 59 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள், 308 பள்ளிகள் சேதம் அடைந்தன.
இந்த நிலையில், கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மெக்சிகோவில் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கி மாயமான 27 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான ராணுவத்தினா் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.