வறண்டு போன குற்றால அருவிகள் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் குற்றால அருவிகள் நீர்வரத்து இன்றி வறண்டுள்ளன.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்தாலும்கூட, வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அடுத்த 3 தினங்களுக்கு 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதேபோல் வட தமிழ்நாட்டில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : பேரணியில் குழந்தைகள் பங்கேற்றதாக புகார் - அமித்ஷா மீது தெலங்கானா காவல்துறை வழக்குப்பதிவு!
இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழைப்பொழிவு இல்லாததால், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீரின் வரத்து முற்றிலும் குறைந்து, வறண்ட நிலை ஏற்பட்டுள்ளது. வார இறுதி மற்றும் தொடர் விடுமுறை என்பதால் ஆர்வமுடன் குற்றால அருவிகளில் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள், மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.