டிரா... சூப்பர் ஓவர்.. வாக்குவாதம்.. - பரபரப்பான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி.!
டிரா... சூப்பர் ஓவர்.. வாக்குவாதங்களுக்கு மத்தியிலும் பரபரப்பான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு போட்டியில் வென்ற இந்தியா, 2-0 என தொடரை கைப்பற்றியது. இன்று மூன்றாவது, கடைசி போட்டி பெங்களூரு, சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனை அடுத்து பேட்டிங்கில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா சதமடித்தார். இவர் 69 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிங்கு சிங் 69. ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
இதனை அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் ரஹமதுல்லாவும், இப்ராஹிமும் தலா 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய குல்புதீன் மற்றும் முகமது நபி ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை வெற்றிப் பாதைக்கு அருகே சென்றது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் போட்டி சமனில் முடிவடைந்தது.
போட்டி சமன் ஆனதால் சூப்பர் ஓவருக்கு ஆட்டம் சென்றது. சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்து 16 ரன்களைச் சேர்த்தது. முகேஷ் வீசிய ஓவரின் கடைசிக்கு முந்தைய பந்தை முகமது நபி சிக்ஸராக்கினார். கடைசி பந்தில் 3 ரன்களை ஓடினார். இதில் நபிக்கும் ரோஹித்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் ரோஹித் சர்மா இரண்டு சிக்ஸர்களை அடிக்க கடைசிப் பந்தில் இந்தியாவின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ஒமர்சாய் சிறப்பாக பந்து வீச, இவர்களால் ஒரு ரன்னை மட்டுமே எடுக்க முடிந்தது. போட்டி மீண்டும் டை ஆனது. இதனைத் தொடர்ந்து ஆட்டம் மீண்டும் சூப்பர் ஓவருக்குச் சென்றது.
இரண்டாவது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் களமிறங்கியுள்ளனர். முதல் பந்தில் ரோகித் சிக்ஸருக்கு விளாச, 4வது பந்தில் ரிங்கு சிங் தனது விக்கெட்டினை இழந்தார். அதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா ரன் அவுட் ஆனதால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு 12 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரவி பிஷ்னாய் வீசிய இரண்டாவது சூப்பர் ஓவரின் முதல் பந்தில் முகமது நபி டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.