"திராவிட மாடல் இந்தியாவின் திசைக்காட்டி" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
நாட்டின் அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்கும் தமிழ்நாடுதான் முன்னோடியாகத் திகழ்கிறது என்றும், திராவிட மாடல் ஆட்சிதான் இந்தியாவிற்கான சரியான திசைக்காட்டி என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தர்மபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். "ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் மீது தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வருகிறார்" என்று அவர் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி, சட்டம் - ஒழுங்கு நிலைமை, மற்றும் பிற சமூக வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆளுநர் இல்லாததையும், தவறான தகவல்களையும் கூறி வருகிறார் என்று முதலமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஆளுநரை வைத்து பாஜக ஒரு இழிவான அரசியலைச் செய்து வருகிறது என்றும், ஆளுநர் அரசியல்வாதி போல் செயல்படுவதாகவும் மு.க. ஸ்டாலின் சாடினார்.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறித்த புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு இல்லை என தெரிவித்தது கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்தார்.
திமுகவின் திராவிட மாடல் ஆட்சி, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது என்றும், இது மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
சமூக நீதி, கல்வி, சுகாதாரம், மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய அனைத்திலும் தமிழகம் முன்னிலை வகிப்பதாக அவர் கூறினார். இந்தப் பேச்சு, தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.