“ஆசிரியர்களை அரவணைத்துக் கொண்டாடும் திராவிட மாடல் ஆட்சி” - அமைச்சர் #TRB Raaja!
“எங்கெல்லாம் பிற்போக்குத்தனங்கள் எட்டிப்பார்க்கிறதோ, அங்கெல்லாம் சங்கர்கள் எழுந்து நிற்கட்டும் என்று உரக்கச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்” என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை, அசோக்நகரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ‘மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும்’ என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. மகாவிஷ்ணு என்பவர் 2 அரசு பள்ளிகளில் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற தலைப்பில், முழுக்க முழுக்க ஆன்மிக சொற்பொழிவை நிகழ்த்தியுள்ளார். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசியிருக்கிறார்.
அப்போது இப்படி மதரீதியாக மாணவர்களிடம் பேச வேண்டாம் என மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கண்டித்துள்ளார். அதற்கு அந்த சொற்பொழிவாளரான மகாவிஷ்ணு மைக்கில் பேசி அவரை அவமானப்படுத்தினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து ஆன்மிக சொழ்பொறிவு நடத்திய மகாவிஷ்ணுவை கண்டித்த ஆசிரியர் மாற்றுத்திறனாளியான ஆசிரியர் சங்கரை பாராட்டி, சால்வை அணிவித்து, மேடையில் அமர வைத்தார். இந்நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவிட்டுள்ளதாவது;
“ஆசிரியர் சங்கர் போன்றோரே முற்போக்குக் கல்வியின் முன்கள வீரர்கள் ! அப்படியான ஆசிரியர்களை அரவணைத்துக் கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி இது! எங்கெல்லாம் பிற்போக்குத் தனங்கள் எட்டிப்பார்க்கிறதோ, அங்கெல்லாம் சங்கர்கள் எழுந்து நிற்கட்டும் என்று உரக்கச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்” என அமைச்சர் ராஜா குறிப்பிட்டுள்ளார்.