#ECI | தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நாளை தொடக்கம்!
தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நாளை தொடங்குகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் என்பது ஆண்டுக்கு ஒருமுறை என்ற நிலையில் இருந்து மாறி ஆண்டுக்கு நான்கு முறை விண்ணப்பங்கள் பெறப்பட்டு சரிபாா்க்கப்பட்டு வருகின்றன. இந்த அடிப்படையில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் 18 வயது பூர்த்தி அடைந்தாலும் அப்போதே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அந்த வகையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகள் நாளை (அக். 29) தொடங்குகிறது. அன்று காலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பட்டியல் அடிப்படையில், திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வரும் நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த மனுக்கள் அனைத்தின் மீதும் டிசம்பர் 24-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜன. 6-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. நவம்பரில் நடக்கும் திருத்தப் பணிகளின்போது வார விடுமுறையின் நான்கு தினங்களில் சிறப்பு முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : "பாஜகவின் C Team தான் தமிழக வெற்றிக் கழகம்" - அமைச்சர் ரகுபதி பேட்டி!
இதுதவிர, அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். சிறப்பு முகாம் நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் மனுக்களை கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.