Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு - விடுதலையான 9 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

07:53 PM Dec 18, 2024 IST | Web Editor
Advertisement

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளை, கைது செய்து ஆஜர்படுத்த உச்ச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, நிலப் பிரச்னை தொடர்பாக கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைவழக்கில் சுப்பையாவின் உறவினரான அரசுப் பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார்,  என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு, சுப்பையாவின் மனைவி சாந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், “கொலை வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையில் அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுதலை செய்தது ஏற்க முடியாதது. இதுபோன்ற தீர்ப்பை இதுவரை பார்த்ததில்லை. எனவே இந்த மேல்முறையீட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் 4 வார காலத்தில் பதிலளிக்க வேண்டும்" என நோட்டீஸ் பிறப்பித்து கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு இன்று நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், “நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய குற்றவாளிகள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எவரும் ஆஜராகவில்லை. அவர்கள் மெத்தனப்போக்கில் நடக்கிறார்கள். எனவே நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள் “அடுத்த விசாரணையின்போது குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கை ஜன.28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Tags :
arrest warrantmadras HCSubbiah Murder CaseSupreme court
Advertisement
Next Article