இந்திய குடியரசு தின விழாவில் ஜோ பைடன் பங்கேற்பாரா?
இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை விருந்தினராக பங்கேற்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய குடியரசு தின விழாவில் (2024) தலைமை விருந்தினராகப் பங்கேற்க வருமாறு ஜோ பைடனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். எனவே, அவர் இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளதாக கடந்த செப்டம்பரில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: மியான்மரில் சீர்குலைந்து வரும் பொருளாதாரம் – நடப்பு நிதியாண்டில் 1% வளர்ச்சியே இருக்கும் என உலக வங்கி கணிப்பு
ஆனால், ஜோ பைடனின் இந்தியப் பயணம் குறித்து வெள்ளை மாளிகை தரப்பில் உறுதியான தகவல் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், 2024-ம் ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவில் க்வாட் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க ஜோ பைடன் இந்தியாவுக்கு வருவார் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 'க்வாட்' உச்சி மாநாடு தேதி இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
உறுப்பு நாடுகள் அனைத்தும் ஆலோசனை நடத்தி தேதி இறுதி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை 'க்வாட்' கூட்டமைப்பில் உள்ளன. இந்திய, பசிபிக் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் க்வாட் கூட்டமைப்பு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.