“அதிமுகவின் இரு அணிகளையும் பொது சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும்” - தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் புதிய மனு!
மக்களவை தேர்தல் வேட்புமனுவில் அதிமுக வேட்பாளர்களை அங்கீகரித்து கையெழுத்திட அதிகாரம் வழங்கவேண்டும் அல்லது இரு அணிகளையும் பொது சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மனு அளித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், “அதிமுகவின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். எனவே, அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடியை அவரும், அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், “மக்களவை தேர்தல் வேட்புமனுவில் அதிமுக வேட்பாளரை அங்கீகரித்தும், சின்னத்தை அங்கீகரித்தும் கையெழுத்திட தனக்கு அதிகாரம் வழங்க வேண்டும் அல்லது அதிமுகவின் இரு அணிகளையும் பொது சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.