கடப்பாரையால் கதவுகள் உடைப்பு... அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நள்ளிரவு 1 மணிக்கு முடிந்த அமலாக்கத்துறை சோதனை!
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் கிட்டதட்ட 12 மணிநேர சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.
வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொதுச்செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனை 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான சோதனை என அமலாக்கத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியானது.
மேலும் காட்பாடியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த், திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோர் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். கிட்டத்தட்ட 12 மணிநேரத்திற்கு பிறகு சோதனை நிறைவடைந்துள்ளது. நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 1.20 மணிக்கு நிறைவடைந்தது. நேற்று காலை சென்றவர்கள் வீட்டில் யாரும் இல்லாததால் 5 மணிநேரம் காத்திருந்து மதியம் முதல் சோதனையை தொடங்கினர்.
இந்த சோதனையில் ஏதும் முக்கிய ஆவணங்களோ, பணமோ சிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் துரைமுருகன் வீட்டில் இரண்டு அறைக்கதவுகள் உடைக்கப்பட்டு சோதனை நடைபெற்றுள்ளது. இரண்டு அறைக்கதவுகளுக்கும் சாவி இல்லாததால் முக்கிய ஆவணங்கள் இருக்கும் என கதவை உடைத்துள்ளனர். கதவு உடைப்புக்கு கடப்பாரை, உளி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
கதிர் ஆனந்த் நடத்தும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.