#TNLocalbodyElection: வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று தொடக்கம்!
தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கள ஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி, இன்று (ஆக. 20) முதல் தொடங்கப்படவுள்ளது.
வரும் அக்டோபர் 18-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி மறு சீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இடையேயான முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல், பகுதி எல்லைகளை உத்தேசமாக மறுசீரமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இப்பணியின் போது, வீட்டுக்கு வரும் அலுவலர்களிடம் அளிக்கப்படும் விவரங்கள், உரிய செயலியில் பதிவு செய்யப்பட்டு, சரிபார்க்கப்படும்.
விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் டிசம்பர் 24-ம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.