“சின்னம் பார்த்து வாக்களிக்காமல் தகுதியை பார்த்து வாக்களியுங்கள்” - தங்கர் பச்சான் வேண்டுகோள்!
இலவசங்கள் வேண்டாம் என்ற நிலை எப்போது வருகிறதோ, அன்று தான் இங்கு உயர்வு வரும் என்று கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : “தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துவிட்டனர்” – அதிமுக மீது அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு!
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளராக இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடும் நிலையில், கடலூரில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தங்கர் பச்சான் பேசியதாவது :
“வாக்கு வாங்குவதற்காக நான் பேசவில்லை. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் எத்தனை தலைவர்கள், எத்தனை வாக்குறுதிகள். அனைத்திலும் ஏமாந்துள்ளோம். அந்த கோபம்தான் நான் இன்று இங்கு நிற்கிறேன். மக்களாட்சி முறையை நான் மதிப்பவன். நான் 7 வயதில் பார்த்த கடலூர், 62 வயதிலும் அப்படி தான் உள்ளது. விவசாயியை இதுவரை நினைத்து பார்த்தவர்கள் இருக்கிறார்களா. இனியாவது நினைப்பார்களா? பொங்கல் பண்டிகைக்கு இலவசத்தை விவசாயிக்கு அளிக்கின்றனர். இதை தவிர விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. தேர்தல் என்பது வருமானம் தரும் தொழிலாக மாறிவிட்டது.
பாமக மாற்றி மாற்றி கூட்டணி வைப்பதாக சொல்கின்றனர். இங்கு உள்ள கட்சிகள் அனைத்தும் கூட்டணி மாற்றி வைக்காமல் இருந்துள்ளனரா? எனக்கு வாக்களித்தால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இல்லையென்றால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. இலவசங்கள் வேண்டாம் என்ற நிலை இங்கு எப்போது வருகிறதோ, அன்று தான் இங்கு உயர்வு வரும். உழைக்கும் மக்களை விட உலகில் உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. சின்னம் பார்த்து வாக்களிக்காமல் தகுதியை பார்த்து வாக்களியுங்கள்”
இவ்வாறு கடலூர் தொகுதி பாமக வேட்பாளரும் இயக்குநருமான தங்கர் பச்சான் கூறியுள்ளார்.