“நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்” - நடிகர் சூரி குறித்து சிவகார்த்திகேயன் புகழாரம்!
நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள் எனவும், நடிகர் சூரி அதற்கு முக்கிய உதாரணம் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இந்தப் படத்தை எதிர் நீச்சல், காக்கிச் சட்டை, கொடி, பட்டாசு ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தில் நடிகர் சூரியை தவிர்த்து, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான இப்படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த திரைப்படம் மே 31-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (மே 21) சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், வெற்றிமாறன், துரை செந்தில்குமார்,சசிகுமார், உன்னி முகுந்தன், நடிகை வடிவுக்கரசி, சினேகன், சமுத்திரக்கனி, சசிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது :
"சீமராஜா படப்பிடிப்பின் போது சூரி அண்ணனிடம் கதையின் நாயகனாக சில கதைகளை தேர்வு செய்து நடிக்க கூறினேன். ஆனால் அவர் தயங்கினார். பிறகு சிறிது காலம் கழித்து என்னை அழைத்த சூரி, இயக்குநர் வெற்றிமாறன் தன்னை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து படம் இயக்க இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் அடுத்தடுத்து சிக்கிய 2 சிறுத்தைகள்!
காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பவர்களால் எமோஷன், சீரியஸ் வேடங்களில் எளிதாக நடித்துவிட முடியும். காமெடி நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். அதற்கு இன்னொரு உதாரணம் சூரி அண்ணன். காமெடி நடிகர்களால் சீரியஸ் கதாபாத்திரங்களில் நடித்துவிட முடியும். ஆனால், சீரியஸ் கதாபாத்திரம் நடிப்பவர்களால் காமெடி வேடங்களில் நடித்துவிட முடியாது. அது மிகவும் கடினமானது."
இவ்வாறு தெரிவித்தார்.