For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாலியல் தொல்லைகள் குறித்து சங்கத்தில் புகார் அளிக்காமல் ஊடகத்தில் ஏன் பேசுகிறீர்கள்? - நடிகை #Rohini கேள்வி

04:22 PM Sep 08, 2024 IST | Web Editor
பாலியல் தொல்லைகள் குறித்து சங்கத்தில் புகார் அளிக்காமல் ஊடகத்தில் ஏன் பேசுகிறீர்கள்    நடிகை  rohini கேள்வி
Advertisement

பாலியல் புகார் குறித்து ஊடகத்தில் பேச வேண்டாம் என நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

Advertisement

மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோரின் தவறான நடத்தை பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இந்திய திரையுலகத்தை உலுக்கியுள்ளது. தொடர்ந்து, நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, எடவேல பாபு, இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த அறிக்கையின் தாக்கத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லை குறித்த விசாரணை அறிக்கையை தெலங்கானா அரசு வெளியிட வேண்டும் என்றும் நடிகை சமந்தா வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தமிழ் சினிமா துறையிலும் எழுந்து வருகிறது. இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது ஆண்டு பேரவை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி பேசியதாவது,

"பாலியல் குற்றங்கள் குறித்து எங்களிடம் எந்த விதமான புகாரும் கொடுக்காமல் நேரடியாக ஊடகங்கள் முன்பு பேசுவது ஏற்புடையதல்ல. அவ்வாறு செய்வதால் ஒட்டுமொத்த சினிமா துறை மீதும் தவறான எண்ணம் உருவாகும். சில ஊடகங்கள் டிஆர்பி, லைக்ஸ் மற்றும் வருமானத்திற்காக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் நீங்கள் நேரடியாக ஊடகங்கள் முன்பு பேச வேண்டாம். நீங்கள் எங்களிடம் புகார் அளித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கமிட்டி 2019ல் உருவாக்கப்பட்டது.

அப்போது சில புகார்கள் வந்தது. அதை நாங்கள் தீர்த்தும் வைத்திருக்கிறோம். அது யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த கமிட்டியின் நோக்கமே அதுதான். புகார்களை தெரிவிப்பதற்கு எண்ணையும், இமெயில் முகவரியையும் உருவாக்கி இருக்கிறோம். நீங்கள் எதையும் சகித்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பல பேர் மீது புகார் வந்துள்ளது. அதன் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். நடிகைகள் யாரும் அச்சப்பட வேண்டாம். உங்கள் பின்னால் சங்கம் இருக்கிறது. அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம்."

இவ்வாறு நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி தெரிவித்தார்.

Tags :
Advertisement