“இலவசங்கள் வழங்கி மக்களின் பாக்கெட்டுகளை பலப்படுத்த வேண்டாம்” - குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் பேச்சு!
இலவசங்கள் எனக்கூறி மக்களின் பாக்கெட்டுகளை பலப்படுத்த வேண்டாம். மனித வளத்தையும் மனித மனங்களையும் பலப்படுத்துங்கள் என குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக அளிக்கப்படும் சமூக நல திட்டங்கள், இலவசங்கள் என தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் என்றாலே போட்டியிடும் அனைத்து கட்சிகளும் இலவசங்களை அறிவிப்பது ஒரு வழக்கமாகவே உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலத்தேர்தலில் இறுதியாக நடைபெற்ற தெலங்கானா தேர்தலில் கூட ஆண்டுக்கு நான்கு எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாகவும், புதிதாகப் பிறந்த பெண் குழந்தைகளின் பெயரில் ஃபிக்சட் டெபாசிட் பதிவு செய்வதன் மூலம் 21 வயதை அடைந்த பிறகு அவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இலவசங்கள் குறித்து காட்டமான விமர்சனத்தை குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் முன்வைத்துள்ளார். மனித உரிமைகள் நாளை முன்னிட்டு டெல்லி பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர்,
“இலவசங்கள் என சொல்லப்படுபவையும், அதை வைத்து செய்யப்படும் அரசியலும், அரசின் செலவினங்கள் மற்றும் முன்னுரிமைகளை சிதைக்கின்றன. போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்படுகின்றன. பொருளாதார வள்ளுநர்களின் கூற்றுப்படி, இலவசங்கள் என்பது நாட்டின் பொருளாதார நிலையையும், அடிப்படை கட்டமைப்பையும் பலவீனப்படுத்துகிறது.
#HumanRights are spinally strengthened when there is human empowerment, in sharp contradiction to physical patronage.
Empowerment of the pocket by fiscal grant only increases dependence.
Politics of so-called freebies, for which we see a mad race, distort expenditure… pic.twitter.com/5OIhSBkcCE
— Vice President of India (@VPIndia) December 10, 2023
மக்களின் பாக்கெட்டுகளை பலப்படுத்த வேண்டாம். மனித வளத்தையும் மனித மனங்களையும் பலப்படுத்துங்கள். அதன்மூலம் ஆட்சி செய்பவர்களுக்கு அறிவூட்டலாம். மனித உரிமைகள் மற்றும் விழுமியங்கள் மலர்வதன் காரணமாக நமது நாட்டின் எதிர்காலம் பொற்காலமாகும். சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்பதுதான் இந்தியாவின் புதிய விதி. முன்னுதாரணத்தில் புதிய உச்சம் தொட்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.