For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“இசையில் அரசியலை கலக்க வேண்டாம்” | டி.எம்.கிருஷ்ணா விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து!

11:10 AM Mar 23, 2024 IST | Web Editor
“இசையில் அரசியலை கலக்க வேண்டாம்”   டி எம் கிருஷ்ணா விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து
Advertisement

“இசையில் அரசியலைக் கலக்க வேண்டாம்” என  டி.எம்.கிருஷ்ணா விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

பிரபல கர்நாடக இசைப்பாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு இந்த வருடத்திற்கான சங்கீத கலாநிதி விருது அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில்,  “பெரியார் போன்ற தலைவரை புகழ்ந்து பாடிய டி.எம் கிருஷ்ணாவிற்கு விருது வழங்கிய இடத்தில் நாங்கள் பாட விரும்பவில்லை” என ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டிருந்தனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து டி.எம்.கிருஷ்ணாவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்நிலையில், The Music Academy-இன் 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி உள்ள சிறந்த பாடகர் டிஎம்.கிருஷ்ணாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், "கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது. இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்."

"டி.எம்.கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுதலுக்கு உரியவர்கள். டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை!" என பதிவிட்டுள்ளார்."

Tags :
Advertisement