“காவல்துறையின் சம்மனை கண்டுகொள்ள வேண்டாம்” - ராஜ்பவன் ஊழியர்களுக்கு மேற்கு வங்க ஆளுநர் உத்தரவு!
இதனிடையே, திடீர் திருப்பமாக ராஜ்பவனில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர், ஆளுநர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்துள்ளார். ராஜ்பவன் வளாகத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அவர் புகார் கொடுத்துள்ளார். உடனே அவரை போலீஸார் ஹரே தெரு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் முறைப்படி ஆளுநர் மீது புகார் கொடுத்துள்ளார். நிரந்தர வேலை கொடுப்பதாக கூறி பல சந்தர்ப்பங்களில் ஆளுநர் தன்னை மானபங்கம் செய்ததாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநர் ஆனந்த போஸ் மறுப்பு தெரிவித்தார்.
தொடர்ந்து, பாலியல் புகார் தொடர்பாக, மேற்கு வங்க ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 3 பேர் மற்றும் ஒரு காவலருக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியது. அந்த சம்மனில் மேற்கு வங்க மாநிலத்தில் ஹரே தெரு காவல் நிலையத்தில் 4 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டது. அவர்களில் காவலர் மட்டுமே விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜரானார். சம்மன் அனுப்பப்பட்ட ஆளுநர் மாளிகை ஊழியர்கள் யாரும் காவல்நிலையத்துக்கு செல்லவில்லை.
போலீஸாரின் விசாரணைக்கு செல்ல வேண்டாம் என்ற ஆளுநர் உத்தரவிட்டிருப்பதே காரணம் என்பது தற்போது தெரிய வந்தது. இந்நிலையில் ஆனந்த போஸ் நேற்று (மே 5) தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அரசியலமைப்பின் பிரிவு 361 (2) மற்றும் (3) ன் படி, ஆளுநருக்கு எதிராக காவல்துறை விசாரிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியாது. குடியரசுத் தலைவர், மாநில ஆளுநருக்கு எதிராக அவரது பதவிக் காலத்தில் நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கைகள் தொடர முடியாது. அதே போல் கைது செய்யவோ, சிறையில் அடைக்கவோ முடியாது.
— Raj Bhavan Kolkata (@BengalGovernor) May 5, 2024
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்துவதாகவும், அவர்கள் ராஜ்பவனின் ஊழியர்களை ஆய்வு செய்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநருக்கு இருக்கும் சிறப்புரிமையால் ராஜ்பவனில் உள்ள ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது. காவல்துறை சம்மன் அனுப்பினால் அதை அவர்கள் புறக்கணிக்க வேண்டும்” என அவர் பதிவிட்டுள்ளார்.