“கருத்துகளை வெளிப்படுத்த தயங்க வேண்டாம்” - நடிகை #NikhilaVimal பேட்டி!
அனைவருக்கும் ஒரு கருத்து இருக்க வேண்டும் என்று தான் நம்புவதாகவும், அதை வெளிப்படுத்த தயங்க வேண்டாம் எனவும் நடிகை நிகிலா விமல் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகை நிகிலா விமல் தமிழில் வெற்றிவேல், கிடாரி, போர்தொழில் ஆகிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான போர் தொழில் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப் பெரிய வெற்றி பெற்றது. தற்போது இரண்டு மலையாளப் படங்கள், ஒரு தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி இருந்த ‘குருவாயூர் அம்பலநடையில்’ படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.
இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. பசு வதை குறித்த கேள்விக்கு பதிலளித்த நிகிலா, அதைத் தடுக்கும் அமைப்பு நாட்டில் இல்லை என்றும், தான் மாட்டிறைச்சி உட்கொண்டதாகவும் கூறினார். ஒன்று நீங்கள் அனைத்து விலங்குகளையும் கொல்லுங்கள் அல்லது அனைத்து விலங்குகளையும் கொல்லவே கூடாது என தெரிவித்திருந்தார். இதற்கிடையில், நிகிலா சம்பந்தப்பட்ட சர்ச்சை தனது படத்திற்கு நல்ல விளம்பரமாக அமைந்தது என்று ஜோ அண்ட் ஜோ படத்தின் தயாரிப்பாளர் ஹாரிஸ் டெசோம் கூறினார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் நடித்த ஜோ அண்ட் ஜோ படத்தின் விளம்பரத்திற்காக துபாய் சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் நிகிலா பேசியதாவது, “தொழில்துறையைச் சேர்ந்த பலர் எனது கருத்துகளைப் பாராட்டினர். சிலர் இது தேவையற்றது என்று கருதினர். அப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது, இந்த விஷயத்தில் எனது பார்வையைப் பகிர்ந்து கொண்டேன். அனைவருக்கும் ஒரு கருத்து இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன் அதை வெளிப்படுத்த தயங்க வேண்டாம்" என்று நிகிலா கூறினார்.