Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற கூடாது" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

12:15 PM Jun 19, 2024 IST | Web Editor
Advertisement

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு,  மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அங்கிருந்து,  அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாஞ்சோலை,  நாலுமுக்கு,  காக்காச்சி உள்ளிட்ட மலை கிராமங்கள் அமைந்துள்ளது.  இங்குள்ள தேயிலை தோட்டத்தை பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனம் என்ற தனியார் நிறுவனம் 99  ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ளது.  இங்கு சுமார் 500 மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில் இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி 2028 ஆம் ஆண்டுக்குள் தனியார் தேயிலை நிறுவனத்தை காலி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால்,  குத்தகை ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பே  தேயிலை தோட்டத்தை காலி செய்ய பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனம் முடிவு செய்து,  தொழிலாளர்களை வெளியேற்றி வருகிறது.  ஆனால்,  தங்களுக்கு எந்தவித மறுவாழ்வு நடவடிக்கையும் செய்து தரவில்லை என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இதையும் படியுங்கள் : காலி பாட்டிலை டெலிவரி செய்த ஸ்விக்கி நிறுவனம்! – வைரலாகும் வாடிக்கையாளரின் பதிவு!

அப்போது மனுதாரர் தரப்பில், "இலங்கை தமிழர்கள் பலருக்கு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரப்பர் கழகத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது.  ஆகவே, மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா,  கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு போன்றவற்றை செய்து தர வேண்டும்" என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள்,  "மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அங்கிருந்து,  அவர்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது" என உத்தரவிட்டனர்.  மேலும், வழக்கு தொடர்பாக அரசுத்தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags :
BBTCLestateHigh courtMaduraiManjolaiManjolaiWorkersTeaEstatesTirunelveli
Advertisement
Next Article