“பதற்றமடைய வேண்டாம்” - ODI ஓய்வு குறித்த கேள்விக்கு விராட் கோலி பதில்!
9வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா அணி நியூஸிலாந்து அணியை வீழ்த்தி சாம்யியன் பட்டம் பெற்றது. இதனிடையே இத்தொடரின் முடிவில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வை அறிவிப்பார்கள் என செய்திகள் வெளியானது. காரணம் இருவரும் டி20 உலககோப்பை வெற்றிக்கு பிறகு தங்களது ஓய்வை அறிவித்தனர்
தொடர்ந்து வெற்றிக்கு பிறகு ரோஹித் சர்மா, நான் இந்த ஃபார்மட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விராட் கோலி தனது ஓய்வு குறித்து மனம் திறந்துள்ளார். ஐபிஎல் போட்டிக்காக பெங்களூர் சென்ற அவர் ஆர்சிபி அணி சார்பில் நடத்தபட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஓய்வு குறித்த கேள்விக்கு அவர், “யாரும் பதற்றமடைய வேண்டாம். நான் எதுவும் அறிவிக்கப் போவதில்லை. தற்போது எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. கிரிக்கெட் விளையாடுவதை நான் இன்னும் நேசிக்கிறேன். கிரிக்கெட் விளையாடுவதை மிகவும் அனுபவித்து மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். கிரிக்கெட் மீதான அதீத ஆர்வம் உள்ளவரையில் தொடர்ந்து விளையாடுவேன்” என்று கூறினார்.