“புகைப்படங்களை வைத்து கதைகள் சொல்லி ஏமாற்றிவிடக்கூடாது” - எச்சரித்த ராஜ்கிரண்!
மெய்யழகன் படத்திற்கு பிறகு ராஜ்கிரண் தற்போது தனுஷின் இட்லி கடை, கார்த்தியின் வா வாத்தியாரே, சூரியின் மாமன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது புகைப்படங்களை வைத்து யாரும் யாரையும் ஏமாற்றக் கூடாது என எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது,
“நான் ஒரு நடிகன் என்பதால், என்னை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்காக என்று சிலரும், என்னை வைத்து திரைப்படம் இயக்குவதற்காக என்று சிலரும், என் அபிமானிகள் என்றும், என் தீவிர ரசிகர்கள் என்று பலரும், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதென்பது, சாதாரணமாக நடக்கும் விசயம். இம்மாதிரியான புகைப்படங்களை வைத்துக்கொண்டு, என் சொந்தக்காரர்கள் என்றோ, எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றோ கூறிக்கொண்டு, யார் என்ன காரணத்திற்காக உங்களை அணுகினாலும் அவர்களிடம் மிக கவனமாக இருங்கள்.
"கனடா செல்வம்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, என்னை வைத்து படம் தயாரிப்பதெற்கென்று, ஒரு சிபாரிசு மூலம் என்னிடம் வந்து பேசி, என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்ற ஒரு நபர், அதன் பிறகு என்னை சந்திக்கவுமில்லை. படம் தயாரிக்கவும் இல்லை. இது நடந்து ஏழெட்டு வருடங்கள் ஆகிறது.
அதே நபர் சமீபத்தில் தளபதி என்ற ஒரு தயாரிப்பாளரிடம், என்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைக்காட்டி, தன் பெயரை 'ஸ்டார்லின்' என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, ஏதோ ஒரு வகையில் அந்த தளபதி என்பவரை ஏமாற்ற முயன்றதாக என் காதுக்கு செய்திகள் வருகிறது.
என்னிடம், யார் சிபாரிசும் எடுபடாது. என் விசயங்களில், நான் மட்டுமே முடிவெடுக்கிறேன். என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, கதைகள் பல சொல்லி, யாரும் யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காகவே, இந்தப்பதிவு”
இவ்வாறு நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.