”அரசியல் குறித்த கேள்விகள் கேட்க வேண்டாம்” - நடிகர் ரஜினிகாந்த் காட்டம்!
அரசியல் குறித்த கேள்விகளை கேட்க வேண்டாம் என செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் காட்டமாக தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு தாய்லாந்து செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றிருந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கூலி திரைப்படத்தின் பணிகள் 70% முடிவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள 30% ஜனவரி 13-ம் தேதியிலிருந்து 25 தேதிக்குள் முடிவடையும் எனவும் தெரிவித்தார்.
பின்னர் அவரிடம் அரசியல் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் அரசியல் பற்றிய கேள்விகளை கேட்க வேண்டாம் என பல முறை உங்களிடம் நான் தெரிவித்துவிட்டேன் என்று காட்டமாக கூறினார். ரஜினிகாந்த் முகம் சுழிக்கும் அளவிற்கு அவரது ரசிகர்கள் தலைவா தலைவா என உரக்க கத்தினார்கள். அதற்கு அவர் ரசிகர்களிடம் கத்த வேண்டாம் என தெரிவித்தார்.