நாள்தோறும் ரூ.5.6 கோடி: நன்கொடை வழங்கியதிலும் சாதனை படைத்த ஷிவ் நாடார்!
HCL நிறுவனர் ஷிவ் நாடார், ஆண்டுக்கு ரூ.2,042 கோடி நன்கொடை அளிப்பதன் மூலம், அதிக நன்கொடை வழங்குவோரின் பட்டியலில் நாட்டிலேயே முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார், ஆண்டுக்கு ரூ. 2,042 கோடி நன்கொடைகள் வழங்கி வருவதாகவும், அதன் மூலம், இந்திய அளவில் அதிக நன்கொடை வழங்குவோரின் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்க வைத்துள்ளதாகவும் எடெல்கிவ் ஹுருன் இந்தியா பரோபகாரப் பட்டியல் 2023 தெரிவித்துள்ளது.
78 வயதான ஷிவ் நாடார் மூன்றாவது முறையாக இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 2022 பட்டியலுடன் ஒப்பிடும்போது 76% ஷிவ் நாடாரின் பங்களிப்புகள் அதிகரித்துள்ளது.
இந்த பட்டியலில் ரூ.1,774 கோடி நன்கொடை வழங்கிய விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த தொகை அவரது முந்தைய பங்களிப்புகளை விட 267% அதிகமாகும். ரூ.376 கோடி நன்கொடை வழங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி மூன்றாவது இடத்தையும், ரூ.287 கோடி நன்கொடை வழங்கிய ஆதித்ய பிர்லா குழுமத்தின் குமார் மங்கலம் பிர்லா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : இனி டாக்டர் பட்டம் கொடுத்தாலும் இடது கையால் புறக்கணிக்க வேண்டும்..! - கவிஞர் வைரமுத்து பதிவு
2022ஆம் ஆண்டின் பட்டியலில் 7வது இடத்தில் இருந்த அதானி குழும தலைவர் கெளதம் அதானி, கல்விக்காக ரூ.285 கோடி நன்கொடை அளித்ததன்மூலம், 2 இடங்கள் முன்னேறி இந்த ஆண்டின் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
2022-23 ஆம் ஆண்டில், அதிக நன்கொடை வழங்குவோருக்கான பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த தொழிலதிபர்கள், ஒட்டுமொத்தமாக ரூ.5,806 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டின் பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்த தொழிலதிபர்கள் ரூ. 3,034 கோடி நன்கொடை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.