அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் #DonaldTrump!
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும். அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக்கட்சியின் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதனையடுத்து, அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் இன்று (ஜன.20) பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிறது.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டொனால்ட் டிரம்ப்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். மேலும், பதவிக்காலம் முடிவடையும் அதிபர் ஜோ பைடன், விழாவில் கலந்து கொண்டு அதிகாரத்தை டிரம்ப்பிடம் ஒப்படைக்கிறார். பதவியேற்பு விழாவுக்கான கொண்டாட்டங்கள் நேற்று முன்தினம் மாலை வாணவேடிக்கைகளுடன் கோலகலமாக தொடங்கின.
அமெரிக்க நேரப்படி நண்பகல் 12 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்ற பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் குறித்து டிரம்ப் தனது முதல் உரை ஆற்றுவார். இந்த விழாவில் பல நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அந்த வகையில், டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்ள உள்ளார்.