அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார்? - வெளியான அதிர்ச்சி தகவல்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் காரணமாக அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மீண்டும் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியிருக்கும் சூழலில், அவரை எதிர்த்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ட்ரம்ப் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போதுதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் டொனால்ட் ட்ரம்பின் வலது காது பகுதியில் காயம் ஏற்பட்டது. பின்னர், பாதுகாவலர்கள் அவரை மேடையிலிருந்து மீட்டு அழைத்துச் சென்றனர். காயமடைந்த டொனால்ட் ட்ரம்ப் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மீது சிறப்பு பாதுகாப்புப் படை நடத்திய பதில் தாக்குதலில் அந்த நபர் உயிரிழந்தார்.
இதையும் படியுங்கள் : நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்!
டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, துப்பாக்கி சூடு நடத்தியவரின் அடையாளம் தெரியவந்துள்ளது. 20 வயதான தாமஸ் மேத்யூ குரூக்ஸ் என்ற இளைஞர் டொனால்டு டிரம்பை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இது குறித்த காரணத்தை கண்டறிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரசார கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகே உள்ள கட்டிடத்தின் மேற்கூரையில் நின்று டொனால்டு டிரம்பை சுட்டுள்ளார். அந்த இளைஞர் பலமுறை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.