பிரதமர் மோடி லேட்டாப் தருகிறாரா? இணையத்தில் பரவும் தகவல் என்ன?
மத்திய அரசு சார்பில் லேப்டாப் வழங்கப்படுவதாக செய்திகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மை தன்மை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மத்திய அரசு சார்பில் லேப்டாப் வழங்கப்படுவதாக செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ”பிரேக்கிங் நியூஸ்! PMYP பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் 2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியது. எங்கள் திட்டம் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தனிநபர்களுக்கு பயனளிக்கும், சொந்த மடிக்கணினிகளை வாங்க இயலவில்லை, ஆனால் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஒன்று தேவை என்று கருதுபவர்களுக்கு இந்த திட்டம் உகந்ததாக இருக்கும். அதற்காக விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கியுள்ளது. குறைந்த அளவிலான லேப்டாப்களே கையிருப்பில் உள்ளன" என்ற தகவலுடன் பிரதம மந்திரியின் இலவச லேப்டாப் திட்டம் துவங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி நாள் என்றும் கூறி சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று https://giftst.vje6zf.top?lma=n87 என்ற லிங்குடன் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தொடர்ந்து, அந்த செய்தியின் இணைய லிங்க்கை ஆய்வு செய்ததில் அதில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது போன்ற புகைப்படம் இருந்தது தெரியவந்திருக்கிறது. இது குறித்து தொடர்ந்து விசாரித்ததில் 2023ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அங்கம் வகிக்கும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(Archive) கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், அந்நாட்டில் செயல்படுத்தப்படும் மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் என்று இணையதளத்தில் இருந்த அதே புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்(Archive) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமரின் இலவச லேப்டாப் திட்டம் குறித்து காணொலி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், இணையத்தில் பரவில் அந்த லிங்கில் தகவல்களை பதிவு செய்து பார்த்ததில், இந்த தகவலை வாட்ஸ்அப்பில் 15 நண்பர்கள் அல்லது 5 குழுக்களுடன் பகிர்ந்து கொண்டால்" இலவச மடிக்கணினி பெறலாம் எனக் கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் இது ஒரு ஊழல் என்பது தெரியவந்திருக்கிறது.
முடிவாக பிரதம மந்திரியின் லேப்டாப் திட்டம் 2024 என்று, சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் மற்றும் லிங்க், ஒரு ஸ்பேம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.