ஆஸ்கர் போட்டியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஜார்க்கண்ட் சிறுமியின் ஆவணப்படம்!
ஆஸ்கர் விருதுக்காக, சிறந்த வெளிநாட்டு படப் பிரிவிற்கு அனுப்பப்பட்ட கேரள திரைப்படமான ‘2018’ தகுதிச் சுற்றிலேயே நீக்கப்பட்ட நிலையில், ‘டூ கில் ஏ டைகர்’ என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்பட பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 2024 மார்ச் 10-ம் தேதி 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளதாக தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகளை பெறும் படங்கள் 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் அதிகப்படியான வாக்குகளை பெறும் படங்கள் இறுதி கட்ட நியமனங்களுக்குத் தேர்வாகும் என அறிவித்துள்ளது. இதற்கான வாக்குப்பதிவு 2024ஆம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி முதல் 16 வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது.
அதன் ஒருபகுதியாக அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், 10 பிரிவுகளுக்கான பரிந்துரைகளின் இறுதிப் பட்டியலை கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 22) அறிவித்தது. இதில், சிறந்த அயல்நாட்டு திரைப்படப் பிரிவில் மலையாளப் படமான 2018 தேர்வானது. ஆனால், தகுதிச் சுற்றுடன் வெளியேறியது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் தேர்வான ‘ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லெஸ்’ திரைப்படமும் அடுத்த சுற்றுக்குத் தேர்வாகவில்லை.
எனவே, 2024-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் போட்டியில் எந்தப் பிரிவிலும் இந்தியத் திரைப்படங்கள் தேர்வாகவில்லை. இதற்கிடையே, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையையும் அதைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு எதிராக சிறுமியின் தந்தை நடத்திய சட்டப்போராட்டத்தையும் மையமாக வைத்து உருவான ‘டூ கில் ஏ டைகர்’ என்கிற கனடா ஆவணப்படம் சிறந்த ஆவணப்பட பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
நிஷா பகுஜா தயாரிப்பு, இயக்கத்தில் உருவான இந்த ஆவணப்படம் பல்வேறு திரை விழாக்களில் பங்குபெற்ற மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.