11 வயது சிறுவனின் வயிற்றில் சிக்கியிருந்த பொருள்... மருத்துவர்கள் அதிர்ச்சி!
கிழக்கு சீனாவில் 11 வயது சிறுவனுக்கு வயிறு வீங்கி காணப்பட்டது. இதனை கவனித்த பெற்றோர் சிறுவனிடம் இது குறித்து கேட்டபோது வயிற்றில் வலி எதுவும் இல்லை என்று கூறினார். இருப்பினும் பெற்றோர் சிறுவனை மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் சிறுவனின் வயிற்றில் குடலில் ஒரு அடர்த்தியான உலோகப் பொருள் சிக்கியிருந்தது தெரியவந்தது. அது வேறொன்றுமில்லை தங்க கட்டிதான்.
அறுவை சிகிச்சை ஏதும் செய்யாமல் அதனை இயற்கையாக வெளியேற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். மருத்துவர்கள் அதற்கான மருந்துகளை பரிந்துரைத்தனர். பெற்றோர்களும் அந்த மருந்துகளை சிறுவனுக்கு கொடுத்தனர். இருப்பினும் வயிற்றின் வீக்கம் குறையாததை கண்ட பெற்றோர் 2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மருத்துவர்கள் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யும் முடிவுக்கு வந்தனர்.
அதன்படி, இரண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் எண்டோஸ்கோபியை பயன்படுத்தி சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இந்த அறுவை சிகிச்சை சுமார் அரை மணிநேரம் நீடித்த நிலையில் குடலில் சிக்கியிருந்த தங்க கட்டியை மருத்துவர்கள் அகற்றினர். சிறுவன் வயிற்றில் இருந்து தங்க கட்டி எடுக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
(எண்டோஸ்கோப் என்பது கேமரா மற்றும் நுண் இழை உள்ளிட்டவற்றைக் கொண்ட அமைப்பாகும். இதன் மூலம் உடலுக்குள் இருக்கும் பகுதியை கண்காணித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும்)