பூனைக்கு டாக்டர் பட்டம் - மாணவர்களுடன் நட்பாக பழகியதற்காக அமெரிக்க பல்கலை. கௌரவம்!
மாணவர்களுடன் நட்பாக பழகியதற்காக அமெரிக்க பல்கலை. ஒன்று பூனைக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
கல்வி கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்கிற காலம் போய் கல்வியில் பல காரணங்களால் சாதிக்க முடியாவிட்டாலும் தங்களது தனித் திறமை மற்றும் கடின உழைப்பால் சென்ற இடமெல்லாம் சிறப்பு பெறுகிற மனிதர்களை சம காலத்தில் நிறையவே கேள்விப்படுகிறோம்.
கல்வியில் படித்து பட்டம் பெற்று அதன் பின்னர் தான் கற்ற கல்வியில் முக்கியமான கருப்பொருளை அடிப்படையாக கொண்டு அதனை ஆய்வு செய்யும் நபர்களுக்கு பல்கலைக்கழகங்கள் முனைவர் பட்டம் வழங்குவது வழக்கம். அதேநேரத்தில் கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், கலைத்துறையினர், விளையாட்டில் சாதித்தவர்கள் என பலருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
இதில் என்ன ஆச்சரியம் எனக் கேட்கிறீர்களா.? பொதுவாக இந்த மாதிரியான கௌரவ டாக்டர் பட்டங்கள் மனிதர்களுக்குத்தான் வழங்கப்படும். ஆனால் அமெரிக்காவில் ஒரு பல்கலைகழகத்தில் பூனைக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை.
அமெரிக்காவில் உள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் வசித்து வருகிறது ‘மேக்ஸ்’ என்கிற பூனை. இது கடந்த 4ஆண்டுகளாகவே இந்த பல்கலைகழகத்தில்தான் இருந்து வருகிறது. இந்த பூனை மாணவர்களிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் குப்பை பெட்டிகளை பொறுப்புடன் பராமரிக்கவும் செய்ததாக பல்கலை. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில்தான் இந்த பூனையான மேக்ஸ்-க்கு வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. பூனையின் நற்குணங்களை பாராட்டி வெர்மாண்ட் பல்கலைக்கழகம் பூனைக்கு 'Doctor of Litter-ature' என்ற கவுரவ பட்டம் வழங்கியுள்ளது. இனிமேல் இப்பூனை டாக்டர் மேக்ஸ் என அழைக்கப்படும் என சமூக வலைதளங்களில் பலர் எழுதிவருகின்றனர்.