மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் - தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!
சென்னையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு முழுதும் அரசு மருத்துவர்கள் இன்று 2வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். இதனால் காயமடைந்த மருத்துவர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரத்தில் இருந்து சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்துள்ளனர்.
மேலும் வெளி நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை, பிற சிகிச்சைகள் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் புறக்கணிப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இப்போராட்டம் நடைபெறுகிறது.
மருத்துவர் பாலாஜி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை வழியாக அளித்த வாக்குறுதிகளை அரசாணையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.