‘திருமண மலர்கள் தருவாயா’ பாடல் நினைவிருக்கிறதா? - மீண்டும் இணைந்த எழில், வித்யாசாகர் கூட்டணி!
சில பாடல்களை எப்போது கேட்டாலும் உற்சாகம் பிறக்கும், எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது. மெலோடி பாடல்களுக்கு அந்த பவர் அதிகம் உண்டு. அப்படி ஆயிரக்கணக்கான பாடல்கள் இருக்கிறது. அதில் ஒன்றுதான ‘‘திருமண மலர்கள் தருவாயா.. தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே.. தினம் ஒரு கனியை தருவாயா வீட்டுக்குள்நான் வைத்த மாதுளையே..’’ என்ற பாடல். எழில் இயக்கத்தில் அஜித்குமார், ஜோதிகா நடிப்பில் உருவான 'பூவெல்லாம் உன் வாசம்' படத்தில் இந்த பாடல் இடம் பெற்றிருந்தது.
கடந்த 2001ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். மேலும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். மறைந்த ஸ்வர்ணலதா இந்த பாடலை பாடியிருந்தார். இன்றும் பலரால் இந்த பாடல் விரும்பி கேட்கப்படுகிறது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இரண்டு பெரிய பங்களா செட் போட்டு இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன.
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்த இந்த படத்திற்கு பிரமாண்ட செட் போட்டவர் கலை இயக்குநர் பிரபாகரன். படப்பிடிப்பு நடந்தபோதும், நிறைவடைந்த பின்னரும் அந்த பிரமாண்ட பங்களா செட்டை பலரும் வெளியில் இருந்து ரசித்தது சென்றதாக கூறப்படுகிறது.
இந்த பாடல் மட்டுமல்ல, படத்தில் இடம் பெற்ற ‘தாலாட்டும் காற்றே வா’,
‘செல்லா நம் வீட்டுக்கு வானம் வில்லை கரைச்சு’, ‘புது மலர் தொட்டு செல்லும்’, ‘காதல் வந்ததும்' ஆகிய பாடல்களும் ஹிட்டத்தன. இப்படி வெற்றி பாடல்களை கொடுத்த இயக்குநர் எழில் மற்றும் இசையமைப்பாளர் வித்யாசாகர் கூட்டணி மீண்டும் 'தேசிங்குராஜா 2' படத்தில் இணைந்துள்ளது.
'தேசிங்குராஜா 2' படத்தில் விமல், பூஜிதா, ஹர்ஷிதா ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, வினோத் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படம் வரும் ஜூலை 11ம் தேதி வெளியாகவுள்ளது. வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் நான்கு நண்பர்கள் வேறு வேறு பாதையில் பயணிக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது.. இவர்கள் எந்த சூழ் நிலையில் மீண்டும் சந்திக்கிறார்கள் என்பதை காமெடி பின்னணியில் எழில் உருவாக்கி இருக்கிறார்.